ரத்தக்கறையுடன் நின்ற கார்: மாயமான ஆசிரியை கதி என்ன?
- தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.
- பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.
கோவை:
கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக ஒரு கார் அனாதையாக நின்றது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுபற்றி பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். அப்போது காரில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. ரத்தக்கறையுடன் ஒரு சுத்தியலும் கிடந்தது. மேலும் ஒரு போர்வை, துண்டு ஆகியவையும் இருந்தது.
ரத்தக்கறையுடன் சுத்தியல் கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த கார் யாருக்கு சொந்தமானது என விசாரித்தபோது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது என தெரியவந்தது. பாலமுருகனின் மனைவி தீபா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 17-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு காரில் புறப்பட்டுச் சென்று இருக்கிறார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் தான் தீபா வந்த கார் கோவையில் அனாதையாக நின்றது தெரியவந்தது. தீபாவுடன், ஆசிரியர் ஒருவரும் வந்ததாக கூறப்படுகிறது. தீபா பணியாற்றிய அதே பள்ளியில் தான் அவரும் பணியாற்றி இருக்கிறார். தீபா மாயமான அன்று அவரும் மாயமாகி உள்ளார். இதனால் தீபாவையும், அந்த ஆசிரியரையும் போலீசார் தேடி வந்துள்ளனர்.
தற்போது தீபா வந்த காரில் ரத்தக்கறை படிந்துள்ளதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தீபாவுக்கும், அவருடன் வந்த ஆசிரியருக்கும் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் தாக்கிக் கொண்டதில் காரில் ரத்தக்கறை ஏற்பட்டதா அல்லது எதனால் ரத்தக்கறை ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் மாயமான ஆசிரியை தீபாவின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரையும், ஆசிரியரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கை பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருவதால் கோவை மாநகர போலீசாருக்கு அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.