தமிழ்நாடு

சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் போட்ட கைதிகள் யார்? கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை

Published On 2023-08-01 03:49 GMT   |   Update On 2023-08-01 03:49 GMT
  • பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம்:

சேலம் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சிறையில் வழங்கும் உணவுகள் தவிர கேன்டீன் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழவகைகளும் கொடுக்கின்றனர். இதனை கைதிகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

இப்படி வழங்கப்படும் பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தோண்டி எடுத்தனர். அதில் ஆப்பிள், மாதுளை, வெல்லம் உள்பட பல்வேறு பழங்களை போட்டு ஊற வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அதனை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த ஊறலை அங்கு போட்டு வைத்த கைதிகள் யார் ? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News