தமிழ்நாடு

6 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட வாலிபர் யார்? தலை-கால்-கைகள் கிடைக்காததால் போலீஸ் தவிப்பு

Published On 2023-12-31 09:00 GMT   |   Update On 2023-12-31 09:00 GMT
  • பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
  • அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம்.

பூந்தமல்லி:

குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று பிற்பகலில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடல் ஒன்று ஏரியில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு போலீஸ் படையுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அழுகிய நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாகவே உடல் காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட வாலிபரை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளிகள் உடலை 6 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உடலை மட்டும் ஏரியில் வீசியுள்ளனர். ஒரு காலையும் அங்கேயே போட்டுவிட்டு மற்ற உடல் பாகங்களை வேறு எங்கேயோ வீசியுள்ளனர்.

தலையில்லாத உடல் பகுதி மற்றும் ஒரு காலை மட்டுமே அங்கு சிக்கியுள்ள நிலையில் தலை மற்றும் இன்னொரு கால், கைகள் ஆகியவை ஏரிக்குள்ளேயே வீசப்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மூலமாக உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காண்பதற்கான பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாயமாகியுள்ள வாலிபர்களின் பட்டியலை சேகரித்துள்ள போலீசார் அவர்களின் கதி என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.


கொலையாளிகள் வேறு எங்கேயாவது வைத்து கொலை செய்துவிட்டு உடலை மட்டும் கல்லால் கட்டி ஏரியில் தூக்கி வீசி இருக்கலாம் என்றும், மற்ற உடல் பாகங்களை ஏதாவது காட்டுப் பகுதியிலோ, அல்லது குப்பை மேடுகளிலோ வீசி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து சுற்று வட்டார பகுதிகளில் குப்பை மேடுகள் மற்றும் புதர்கள் மண்டியுள்ள இடங்களிலும் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகிறார்கள்.

இதுதொடர்பாக தனிப் படை போலீசார் அந்த பகுதி முழுவதுமே கண் காணித்து வருகிறார்கள்.

3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே வாலிபரை கொன்று இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஏரியில் உடலை வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலை மற்றும் கைகள், கால் ஆகியவை கிடைத்தால் மட்டுமே கொலை வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் அதை வைத்தும் துப்பு துலக்கி வருகிறார்கள்.

இந்த டி.சர்ட்டில் "தி டிரம்மர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த அடையாளங்களும் இல்லை. இதுபோன்று ஆடைகள் கிடைக்கும்போது காலரின் பின்னால் டெய்லர் கடையின் பெயர் இருக்கும். அதை வைத்து இதற்கு முன்பு பல வழக்குகளில் போலீசார் துப்புதுலக்கி உள்ளனர்.

ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியில் கைப்பற்றப்பட்ட டி.சர்ட் ரெடிமேட் டிசர்ட்டாக உள்ளது. இதனால் அதனை வைத்து துப்பு துலக்க முடியாத நிலையே இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் இது கொலையுண்ட நபர் அணிந்திருந்த 'டி.சர்ட்' தானா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் போலீசாரை சுற்றவிட வேண்டும் என்கிற எண்ணத்திலும், கொலையுண்ட நபரை எந்த வழியிலும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த உஷாராக செயல்பட்டுள்ளனர்.

இதன்காரணமாகவே கொலையாளிகள் தலை மற்றும் உடல் பாகங்கள் இல்லாத உடலை மட்டும் ஏரியில் வீசிட்டு சென்றிருக்கிறார்கள்.

இதையடுத்து இந்த கொலை வழக்கை போலீசார் சவாலாக ஏற்றுக் கொண்டு துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் நிலங்களே அதிக அளவில் உள்ளதால் கேமராக்களும் பொறுத்தப்படவில்லை. இருப்பினும் வாலிபர் கொலை வழக்கில் சரியான துப்பு எதுவும் துலங்காததால் பொலீசார் தவியாய் தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News