தமிழ்நாடு

சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்தாதது ஏன்?- மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர் கேள்வி

Published On 2022-10-28 10:33 GMT   |   Update On 2022-10-28 10:33 GMT
  • தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று நாய் கடித்து குதறுகிறது.
  • தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது 134-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் உமா சரமாரி கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

சென்னையில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடித்து குதறுகிறது. சிறுவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. கருத்தடை செய்த பிறகும் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரிப்பது ஏன்?

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பதில் அளித்து கூறியதாவது:-

புதியமன்ற கூட்டம் கூடிய பிறகு தெரு நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தெரு நாய்களின் இன உற்பத்தியை தடுக்க சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப்படுகிறது. கண்ணம்மாபேட்டை கால்நடை மருத்துவ மையத்துக்கு ரூ.7 கோடி, லாயிட்ஸ் காலனியில் உள்ள மையத்துக்கு ரூ.6 கோடியே 64 லட்சம், புளியந்தோப்பில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் கிளை மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது. வாரத்திற்கு 400 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News