முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் ஆற்றின் கரையில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்
- மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது.
- மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும். முதுமலை புலிகள் சரணாலயத்தில் வளைந்து நெளிந்து ஓடும் மாயாறு, வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு மற்றொரு யானையும் பிளிறியபடி வந்தது. அப்போது 2 யானைகளும் ஒன்றுக்கொன்று முறைத்து பார்த்தபடி இருந்தன. இந்த நிலையில் அவை திடீரென ஒன்றுக்கொன்று சண்டை போட தொடங்கின. எனவே அந்தப் பகுதியில் யானைகளின் பிளிறலும், தந்தங்கள் மோதிக் கொள்ளும் சப்தமும் பெரிதாக எதிரொலித்தது. இதனைக்கேட்ட பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்களில் ஒரு சிலர் காட்டு யானைகள் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.
மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு 2 யானைகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.
மசினகுடியில் காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை வீடியோ எடுத்த ஒருவர், அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும், மசினக்குடி காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை, டிவிட்டர் இணையதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.