ஆலங்குளம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுமா? தடுப்பு நடவடிக்கையில் 90 பணியாளர்கள்-துணை இயக்குனர் தகவல்
- டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷண நிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மட்டுமல்லாது பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியாக வெள்ளையனுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படும் ஏராளமான சிறுவர்கள்-சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறியமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர், மாறாந்தை, நாலாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. இதையடுத்து காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனைத்து யூனியன்களின் வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்துள்ளோம்.
ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தது மூளை காய்ச்சலால் தான். நேற்று கடையம் பகுதியில் இறந்த 8 மாத சிறுவன் சமீபத்தில் 4 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவந்துள்ளான். அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
பெரும்பாலும் டெங்குவில் இருந்து மீள ஒவ்வொருவரின் உடலிலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் இருந்தால் போதுமானது. பொதுமக்கள் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.