தமிழ்நாடு

1½ ஆண்டில் 6 திருமணம் செய்தது எப்படி?- கல்யாண ராணி பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-09-25 08:06 GMT   |   Update On 2022-09-25 08:25 GMT
  • என்னை போல 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். இதில் கிடைக்கும் பணம் முழுதையும், அவர்களே எடுத்துக் கொள்வர்.
  • திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான் பேட்டையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி புதுவெங்கரை அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

கடந்த 9-ந்தேதி காலையில் புதுமாப்பிள்ளை தனபால் எழுந்து பார்த்தபோது, சந்தியா மாயமாகி இருப்பதும், வீட்டில் இருந்த துணி, நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்றிருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போன் எண் மற்றும் திருமணத்திற்கு அவரது உறவினர்களாக வந்தவர்கள் செல்போன் எண்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே சந்தியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் இடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார். சந்தியா திருமணத்திற்கு வந்தபோது அவரையும், அவரது தோழி தனலட்சுமி உள்ளிட்டோரை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், சந்தியா கடந்த 1½ ஆண்டில் மட்டும் பாண்டமங்கலம் வாத்து வியாபாரி மாரியப்பன் என்பவர் என 6 பேரை திருமணம் செய்து, கைவரிசை காட்டி இருப்பதும், 8-வது திருமணத்திற்கு முயன்றபோது போலீசில் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

மேலும் சந்தியா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு-

மதுரையைச் சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், எனது நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால், நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன்.

என்னை போல, 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். இதில் கிடைக்கும் பணம் முழுதையும், அவர்களே எடுத்துக் கொள்வர். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவர்.

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தருவர். எனக்கு பெற்றோர் இல்லை. எனது உறவினர்களாக ரோஷினி, மாரிமுத்து ஆகிய இருவரையும் நடிக்க, என் வீட்டில் விட்டு விடுவர்.

திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

திருமணம் முடித்தவுடன் உடனடியாக வீட்டை காலி செய்து விடுவர். எனக்கு திருமணம் நடக்கும் போதெல்லாம், புரோக்கர்கள் திருமண போட்டோவில் கூட எச்சரிக்கையாக விலகி நிற்பர்.

பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை பிடித்து விட்டது எனக்கூறி, உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்வர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து, மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றி, என்னை காரில் அழைத்துச் சென்று விடுவர். சில சமயங்களில் மாப்பிள்ளை வீட்டாருக்கு, பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, அங்குள்ள பொருட்களை சுருட்டிக்கொண்டு சென்று விடுவோம்.

மாப்பிள்ளை வீட்டார், அவமானங்களுக்கு பயந்து, பெரும்பாலும் புகார் கொடுப்பதில்லை. இது புரோக்கர்களுக்கு சாதகமாக அமைந்தது. நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் திருமண மோசடிகளை அரங்கேற்றி உள்ளோம்.

கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் மதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணம் என்ற போர்வையில் எனக்கு அவர் பல திருமணங்களை அவர் செய்து வைத்து போலீசில் வசமாக சிக்க வைத்து விட்டார். இவ்வாறு சந்தியா வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

கைதான சந்தியா மற்றும் திருமண மோசடி கும்பல் மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தரகர் தனலட்சுமி (45), வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (26), வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் சேலம் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

தலைமறைவான திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த போலி திருமண புரோக்கர்கள் பாலமுருகன் (45), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (28), ரோஷினி, மாரிமுத்து ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News