மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது- 10-ந்தேதி வங்கியில் பணம்
- ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
- 11 லட்சத்து 86 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இதில் தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதில் விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து செல்போனில் குறுஞ்செய்தியும் அனுப்பப் பட்டிருந்தது.
மேலும் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணைதளத் தையும் தமிழக அரசு தொடங்கி இருந்தது.
இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மனு நிராகரிக்கப் பட்டதற்கான காரணத்தை தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
அதை அறிந்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். செப்டம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வரை மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் பிறகு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.
தற்போது மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் தொலைபேசி வாயிலாக விண்ணப்ப தாரரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனர். சில வீடுகளுக்கு நேரில் சென்றும் விசாரித்து வந்த வண்ணம் உள்ளனர்.
இதில் தகுதியானவர்களுக்கு செல்போனில் இப்போது குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே முதற்கட்டத்தில் மனு கொடுத்து அதில் விடுபட்டவர்களுக்கும் இப்போது தகுதி பார்த்து குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட திட்டத்தை விழாவாக நடத்தி தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி இந்த திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி தகுதியான மகளிருக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சென்று ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.