தமிழ்நாடு

மகளிா் உரிமைத்தொகை திட்டம்: தமிழகம் முழுவதும் 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்ப பதிவு

Published On 2023-08-21 06:26 GMT   |   Update On 2023-08-21 06:26 GMT
  • விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 18-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றன.
  • மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

சென்னை:

மகளிா் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. ஒரு கோடியே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மகளிா் உரிமைத்தொகை திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுபட்டவர்களுக்காக கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று நிறைவடைந்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக இதுவரை 1.55 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மீது பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன.

பரிசீலனைக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கள ஆய்வு பணிகளும் நடத்தப்பட உள்ளன. இதற்காக விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத பயனாளிகளுக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மகளிா் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நிறைவு பெற்ற நிலையில், வங்கிகள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதாலும் முகாமை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இருந்த போதும் முகாம்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News