தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-09-18 02:05 GMT   |   Update On 2023-09-18 02:05 GMT
  • ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
  • 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்ததும் ஒவ்வாரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது.

இதுவரை வங்கி கணக்கு தொடங்காதவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. அடுத்த தவணை பணம் செலுத்துவதற்குள் அவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் 57 லட்சம் விண்ணப்பஙகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அவர்களை விட வசதி படைத்தவர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள்.

அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடமோ மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News