வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு குட்டிகள்
- மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது.
- அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் இதனை ரசித்து செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த 8 மஞ்சள் நிற அனகோண்டா குட்டிகள் பார்வையாளர்கள் பார்வைக்கு விடப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாறையில் ஏறி அனகோண்டா குட்டிகள் சறுக்கி செல்வதை சிறுவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரியிடம் கேட்டபோது, இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது. கடந்த 2020 -ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தில் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து அனகோண்டா பாம்பு ஜோடி பெறப்பட்டது. இதன் இனப்பெருக்கத்தின் மூலம் 6 குட்டிகள் கிடைத்தது. அதனை தனியாக பராமரித்து வந்தோம். இப்போது நல்ல நிலையில் உள்ள அனகோண்டா குட்டிகளை பார்வைக்கு விட்டுள்ளோம். இதற்கு உணவாக சிறிய கோழி குஞ்சுகள், மூஞ்சூறு எலிகள் வழங்கப்படுகிறது. அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.
பூங்காவில் விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதற்கான இயற்கை சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெருப்பு கோழிகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்தன என்றார்.