தமிழ்நாடு

மணிக்குமார் (உள்படம்) - பட்டதாரி வாலிபர் மணிக்குமார் தவறி விழுந்த கிணற்றின் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டம்.

விளையாட்டு வினையானது- கிணற்றில் விழுவது போல் நடித்துக்காட்டிய பட்டதாரி வாலிபர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

Published On 2023-07-24 06:13 GMT   |   Update On 2023-07-24 07:28 GMT
  • நீண்ட நேரம் ஆகியும் மணிக்குமார் வெளியே வராததால் அவர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என எண்ணிய நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.
  • மணிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குத்தாலக்கனி-சுமதி தம்பதியினர். இவர்களது மகன் மணிக்குமார் (வயது 26).

பி.ஏ. வரலாறு படித்து முடித்துள்ள மணிக்குமார் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அனைவரிடமும் எளிதில் பழகும் மணிக்குமாருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.

தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மாலை 5.30 அளவில் அந்த கிணற்றின் கரையில் சக நண்பர்களுடன் அமர்ந்து மணிக்குமார் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அருகில் அமர்ந்திருந்த தனது நண்பர்களிடம் விளையாட்டாக, இப்போது நான் பின்னால் தவறி கிணற்றில் விழுந்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டவாறு பின்னால் சாய்ந்தவாறு நண்பர்களிடம் நடித்து காட்டியுள்ளார்.

இதில் நிலைதடுமாறிய மணிக்குமார் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து சேரும் சகதியுமாக இருந்த கிணற்றுக்குள் விழுந்தார். மணிக்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதனால் அவர் எப்படியாவது வெளியே வந்து விடுவார் என அவரது நண்பர்கள் கரையில் காத்திருந்தனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மணிக்குமார் வெளியே வராததால் அவர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என எண்ணிய நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேத்தூர் போலீசார் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சேரும் சகதியும் நிறைந்த கிணற்றில் நேற்று மாலை முதல் இரவு வரை மணிக்குமார் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் உடலை மீட்க முடியவில்லை. இருள் சூழ்ந்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணியை தொடங்கிய தீயணைப்புத் துறையினர் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மணிக்குமாரின் உடலை மீட்டனர்.

அவரது உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறித்துடித்தனர். தொடர்ந்து மணிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டாக கிணற்றில் விழுவது போல் நடித்து காட்டிய வாலிபர், நண்பர்கள் கண் முன்னரே தவறி விழுந்து சேற்றில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News