நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் முகாம்- கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
- நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
- வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன.
தேன்கனிக்கோட்டை:
கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்துள்ளன. அதில் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன.
அதில் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
காட்டு யானைகள் அருகில் நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணி முச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசம் செய்கின்றன.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன. விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொண்டு உள்ளனர்.