கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்
விழுப்புரம்:
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டம் வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 9.40 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் அமைச்சர் பொன்முடியும் வந்தார். சுற்றுலா மாளிகை வாசலில் தி.மு.க. வக்கீல்கள் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சிக்னல் பகுதிக்கு வந்தார். உதயநிதி ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு வரவேற்றனர். மக்கள் வெள்ளத்தில் அவர் மிதந்து வந்தார்.
அவருக்கு கேரள செண்டை மேளம், பறை இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சாக்கு மூட்டைகளை நீங்களே கொண்டு வருகிறீர்களா என கேட்டார். அதற்கு விவசாயிகள் சாக்கு மூட்டைகளை நாங்கள் தான் கொண்டு வருவோம். கொள்முதல் செய்த பின்னர் அதனை எடுத்து சென்று விடுவோம் என்றனர். வியாபாரிகள் உரிய முறையில் பணம் வழங்குகிறார்களா என கேட்டார்.
அங்குள்ள நெல், பஞ்சு உள்ளிட்ட 12 குடோன்களையும் ஆய்வு செய்தார். பின்னர் வெளியே வந்த அவருக்கு மல்லர் கம்பர் விளையாட்டு சிறுவர் , சிறுமிகள் 6 முதல் 21 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விழுப்புரம் நகராட்சி 13-வது வார்டில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், காந்தி சிலை அருகே விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ் செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியின் எதிரே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் அறிவாலயம் வந்தார். அங்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். அதன்பின்னர் திருச்சி புறப்பட்டு சென்றார்.