தமிழ்நாடு (Tamil Nadu)

இன்று இரவு கரையை கடக்கும் டானா புயல்- தயார் நிலையில் 56 பேரிடர் மீட்பு குழுக்கள்

Published On 2024-10-24 05:48 GMT   |   Update On 2024-10-24 05:48 GMT
  • கடல் அலைகள் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
  • டானா புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

மத்திய கிழக்கு வங்கக் கடல் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, கடந்த திங்கட் கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. அது நேற்று முன்தினம் காலை 5.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெற்றது.

நேற்று அதிகாலை அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றது. இதனால் அது சக்தி வாய்ந்த புயலாக மாறியது. இந்த புயலுக்கு கத்தார் நாடு வழங்கிய டானா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஒடிசா மாநிலம் பார தீப்புக்கு தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும் டானா புயல் நகர்ந்தபடி உள்ளது. இது இன்று ஒடிசா வங்க கடலோர பகுதியை நெருங்கி செல்லும்.

டானா புயல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி உள்ளது என்று வானிலை இலாகா கூறி உள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. டானா புயல் தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தபடி இருந்தது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

டானா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒடிசா மாநிலம் பூரிக்கும் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கும் என்று இன்று காலை வானிலை இலாகா அறிவித்துள்ளது.


நாளை அதிகாலை வரை புயல் கரையை கடந்தபடி இருக்கும். அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. கடல் அலைகள் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

புயல் கரையை கடக்கும் போது சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் டானா புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்திலும் புயல் நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஒடிசாவில் மட்டும் சுமார் 5000 ஆயிரம் புயல் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

நிவாரண முகாம்களில் தங்குபவர்களுக்கு உணவு, உடை, மருந்து வசதிகள் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுமார் 10 லட்சம் பேர் கடலோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

டானா புயலின் தாக்கம் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் இருக்கும் என்பதால் சுமார் 1.14 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய ரெயில்வே சுமார் 200 ரெயில்களை ரத்து செய்துள்ளது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு ரெயில்வே நிர்வாகமும் ஏராளமான ரெயில்களை ரத்து செய்து இருக்கிறது.

'டானா' புயல் காரணமாக அங்குல், புரி, நாயகர், கோர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திர பாரா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கான அபாயம் உள்ளதாக அரசு கண்டறிந்துள்ளது.

இந்த 14 மாவட்டங்களில் முதன் மையாக கடலோரப் பகுதியில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.

'டானா' புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் 15 மணி நேரத்துக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 56 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தவிர உள்ளூர் மீட்பு படையினரையும் ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்கள் தயார் நிலையில் வைத்துள்ளன.

Tags:    

Similar News