ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில்: 26-ந்தேதி சோதனை ஓட்டம்
- 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் (44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 1,215.92 கோடிமதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8-ந்தேதி ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரெயிலினை கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் வரும் 26-ந் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.