தமிழ்நாடு (Tamil Nadu)

உண்மையில் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார்- தமிழிசை

Published On 2024-10-23 09:39 GMT   |   Update On 2024-10-23 09:49 GMT
  • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
  • சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை.

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது இதுகுறித்து தமிழசை கூறுகையில், " உண்மையில் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார்.

பிரியங்கா காந்தி போட்டியிடுவதன் மூலம், இது வாரிசு அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக ஒரு இளம் பெண் வேட்பாளரைத் தொகுதியில் நிறுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் பங்களிப்பு என்ன? எனவே இனி மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.

மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது குறித்து அவர் கூறுகையில், "சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

அந்த மாநாட்டின் பெயர் 'சனாதன தர்மத்தை ஒழித்தல். அப்படியென்றால், அவருடைய வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்று எப்படிச் சொல்ல முடியும்? டெங்குவை ஒழிப்பது போல் சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

அவர், சனாதன தர்மத்தை பாகுபாடு என்றும், எஸ்டி/எஸ்சி மற்றும் சமூக நீதிக்கு எதிராகவும் தவறாக விளக்குகிறார்.

சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை. அவர்கள் மக்களிடையே வேறுபாடு காட்ட விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News