தமிழ்நாடு

த.வெ.க. நிர்வாகிகள் மரணம்... அஞ்சலி செலுத்த வந்த புஸ்ஸி ஆனந்திடம் உறவினர்கள் ஆவேசம்

Published On 2024-10-28 13:36 GMT   |   Update On 2024-10-28 13:36 GMT
  • கலைக்கோவன் இறப்பிற்கு விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என அவரது உறவினர்கள் கேள்வி
  • கலைக்கோவன் உடலுக்கு த.வெ.க. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் வந்து அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.

த.வெ.க. மாநாட்டுக்கு செல்வதற்காக அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கலைகோவன், இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் காரில் விக்கிரவாண்டி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார் சாலையின் தடுப்பில் மோதிய விபத்தில் கலைக்கோவன், சீனிவாசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலைக்கோவன், சீனிவாசன் ஆகிய இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து திருச்சி உறையூரில் இருந்த அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டது.

கலைக்கோவன் இறப்பிற்கு விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பினர். நாங்கள் நிதியுதவி எல்லாம் கேட்கவில்லை. விஜய் நேரில் வரவேண்டும் என்று கூறவில்லை. ஒரு இரங்கல் கூட அவர் தெரிவிக்காதது ஏன்? என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனையடுத்து கலைக்கோவன் உடலுக்கு த.வெ.க. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது புஸ்ஸி ஆனந்திடம் அவருடைய உறவினர்கள் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்த், "தவெக தலைவர் விஜய் சொன்னதால்தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினேன். நிர்வாகிகள் இறப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பங்களை கட்சி பார்த்துக்கொள்ளும்" என்று உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News