அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- கொடைக்கானல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொடைக்கானல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.