கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக சோதனை
- கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர்.
- மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் முதல் சென்னை, கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று 2-வது நாளாக கோவை, சென்னையில் சோதனை நடந்தது. இதற்கிடையே சென்னையில் உள்ள மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் மருத்துவக்கல்லூரியில் சோதனை நடந்தது. இதேபோன்று மார்ட்டினின் உறவினர்களான கோவை சிவானந்தபுரத்தில் உள்ள ஜான் பிரிட்டோ என்பவரது வீடு, சிவானந்தா காலனியில் உள்ள அந்தோணியா ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.