தமிழ்நாடு

ரூ.11 லட்ச லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி முன்னாள் நகராட்சி ஆணையருக்கு நெல்லையில் போஸ்டிங்

Published On 2024-11-27 10:38 GMT   |   Update On 2024-11-27 10:38 GMT
  • ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்தனர்
  • ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ரூ.11 லட்சத்துடன் சிக்கிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் கமிஷனராக பணியாற்றிய ஜஹாங்கீர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

அங்கு அனுமதி இல்லாத மற்றும் விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி, வாகனங்களை நிறுத்த தனியாருக்கு அனுமதி என பணம் வாங்கிக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ந் தேதி பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் சில மேற்கூறிய செயல்கள் தொடர்பாக லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுகொண்டிருப்பதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்ததில் அவரது காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது. இது லஞ்ச பணம் என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர் ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஜஹாங்கீர் பாஷா ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது நேருக்கு மாறாக அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

Similar News