ஏற்காட்டில் இன்று காலை சாரல் மழையுடன் கடும் பனிப்பொழிவு- வாகன ஓட்டிகள் அவதி
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டும், குடை பிடித்த படியும் சென்றனர்.
- ஏற்காடு படகு இல்லம் பனிப்பொழிவால் சூழப்பட்டு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல்மழை, பனிப்பொழி, கடும் குளிர் என மாறிமாறி சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை வெயில் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இன்று காலை முதல் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் சுற்றுலா தலங்கள் மற்றும் மலைப்பாதைகளில் பனிப்பொழிவும் அதிகளவில் நிலவியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டும், குடை பிடித்த படியும் சென்றனர்.
இதே போல் மலை பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்பட்டதால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி மெதுவாக வாகனங்களை இயக்கினர். ஏற்காடு படகு இல்லம் பனிப்பொழிவால் சூழப்பட்டு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.
தொடர் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி ஏற்காடு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சமவெளி பகுதிகளிலும் தற்போது பரவலாக மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.