கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.20 கோடிக்கு பட்டாசுகள் விற்க ஏற்பாடு- அமைச்சர் பெரியகருப்பன்
- கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.
- ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் நேற்று, கூட்டுறவுத் துறையின் மூலம் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு வகையில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பணி செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.
மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரும் நிறுவனம்தான் கூட்டுறவு சங்கம். தற்போது புதிதாக அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர்.
மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக வழங்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரூ.199-க்கும், எலைட் ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகின்றோம். இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்