தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்
- இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்த மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேச உள்ளனர்.
அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர். அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
இன்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.