தமிழ்நாடு

மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

Published On 2024-11-14 05:45 GMT   |   Update On 2024-11-14 05:45 GMT
  • கல்வி வளராமல் எந்த மாநிலமும், நாடும் வளர முடியாது.
  • பள்ளிக்கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக இன்னொரு துறைக்கு அனுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கும் நிலையில் 497 ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்பினால் பள்ளிக் கல்வித்துறையில் கற்பித்தல் பணிகள் முற்றிலுமாக முடங்கிவிடும். அது விரும்பத்தக்கதல்ல.

அ.தி.மு.க. ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39சதவீதம் ஆக குறைந்து விட்டது. பள்ளிக்கல்வித்துறையின் சீரழிவுகளுக்கு அத்துறைக்கு அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணமாகும்.

கல்வி வளராமல் எந்த மாநிலமும், நாடும் வளர முடியாது. இதை உணர்ந்து கொண்டு கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு கட்டமாக விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவைக் கைவிட வேண்டும். பள்ளிக்கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News