அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் உடன் இருப்பவர்களுக்கு 'டேக்' கட்டும் நடைமுறை அமலாகிறது
- நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- எல்லா நேரங்களிலும் எல்லோரும் இஷ்டம்போல் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சென்று வரமுடியாது.
சென்னை:
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவமனைகளின் பாதுகாப்பையும், டாக்டர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆஸ்பத்திரி பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நேற்று டாக்டரை குத்தியவர் நோயாளியுடன் வந்தவர். அன்னியர் அல்ல. எனவே இனி நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளை அருகில் இருந்து கவனித்து கொள்ள வருபவர்களுக்கு கையில் ஒரு அடையாள டேக் கட்டப்படும்.
அதில் எந்த நோயாளியை பார்க்க வந்தவர்? அவர் எந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் இடம்பெற்று இருக்கும். இந்த டேக் கையில் கட்டியிருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.
எல்லா நேரங்களிலும் எல்லோரும் இஷ்டம்போல் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சென்று வரமுடியாது.
ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.