தமிழ்நாடு (Tamil Nadu)

மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது

Published On 2024-10-26 05:11 GMT   |   Update On 2024-10-26 05:11 GMT
  • கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சேலம்:

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி..தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News