தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்ப்பது குற்றவாளிகளுக்கு துணை போவதாகும்- ஓபிஎஸ் கண்டனம்

Published On 2024-11-21 06:58 GMT   |   Update On 2024-11-21 06:58 GMT
  • சி.பி.சி.ஐ.டி. காலதாமதமின்றி அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது போல அமைச்சரின் கூற்று உள்ளது.
  • பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, கள்ளச்சாராயம் தயாரிப்பவர், விற்பனையாளர் மற்றும் காவல் துறையினருக்கு மத்தியில் தொடர்பு இருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி., நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்து, இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார் என்று சொல்வது குற்றவாளிகளுக்கு உதவி புரிவது போல் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

சி.பி.சி.ஐ.டி. காலதாமதமின்றி அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது போல அமைச்சரின் கூற்று உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு 90 நாட்களில் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 1,276 நாட்கள் கடந்தும் வழக்கு முடிக்கப்படவில்லை.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்பு குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேங்கைவயல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதுபோன்று பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, சி.பி.சி.ஐ.டி. வசம் இருந்தால் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என்ற அமைச்சரின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News