தமிழ்நாடு (Tamil Nadu)

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து- உதயநிதி பதவி விலகுவாரா? : எல்.முருகன் கேள்வி

Published On 2024-10-25 10:58 GMT   |   Update On 2024-10-25 10:58 GMT
  • நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
  • தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.

சென்னை:

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.

'கண்டமிதில்' என்பதற்கு பதிலாக 'கண்டமதில்' என பாடி விட்டனர்.

இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் அதை மீண்டும் பாடும்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் சொன்னார். அதனை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது.

அப்போது பாடல் வரியில் 'புகழ்' மணக்க என்பதை 'திகழ்'மணக்க என்று மீண்டும் பிழையுடன் பாடினார்கள்.

இதையறிந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்," அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. 2 முறை பாடல் தவறாக பாடப்பட்டது. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறப் போகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி பதவி விலகுவாரா?. தமிழக அரசின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?" என சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News