தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது- எடப்பாடி பழனிசாமி
- என்னைப் பற்றி முதலமைச்சர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றார்.
- அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும்.
விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டிற்காக 80 ஆண்டுகாலம் ஓயாமல் உழைத்தனர் கலைஞர்.
மக்கள் திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்களது பெயரையா வைக்க முடியும்" என்று கடுமையாக பேசினார்.
இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் என்னைப் பற்றி முதமைச்சர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை தெரிவித்து இருகிறார். என்னைப் பற்றி முதமைச்சர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.
10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுக. ஜெயலலிதா ஆட்சியின்போது மக்கள் அதிகளவில் நன்மை பெற்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். எனது ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள், 6 சட்ட கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவை இதுவரை திமுக அரசு திறக்கவில்லை.
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக அரசின் திட்டங்களை திமுக புறக்கணிக்கிறது. கொரோனா காலத்தில் பாராட்டு, விருதுகளை பெற்றது அதிமுக அரசு. திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதையே காரணம்.
அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.