அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாதா?- ராமதாஸ் கேள்வி
- பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
- அரசு ஊழியர்களுக்கு இதைவிடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 309-ம் வாக்குறுதியாக, ''புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய ஆணையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளனர். தங்களின் வாழ்நாள் முழுவதும் தி.மு.க.வை ஆதரித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இதைவிடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.
சிலரை சில முறை ஏமாற்றலாம், பலரை பலமுறை ஏமாற்றலாம். ஆனால், அனைவரையும் அனைத்து முறையும் ஏமாற்ற முடியாது. தி.மு.க.விடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழி தீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்.
2026-ம் ஆண்டில் அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.