தமிழ்நாடு

கடம்பூர் வனப்பகுதியில் சாலையை கடந்து சென்ற புலி- வாகன ஓட்டிகள் பீதி

Published On 2024-11-16 05:16 GMT   |   Update On 2024-11-16 05:16 GMT
  • வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
  • தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக திம்பம், தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் மழை பரவலாக பெய்து வருவதால் வனப்பகுதியில் பசுமையான சூழ்நிலை உள்ளது. மரம், செடி, கொடிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் இருந்து குத்தியாலத்தூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குத்தியாலத்தூரில் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து ஒரு புலி மற்றொரு வனப்பகுதிக்கு சென்றது.

இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைத்தனர். பின்னர் தங்களது வாகனங்களை சிறிது தூரம் முன்பே நிறுத்தி விட்டனர். அந்த புலி மெதுவாக சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடமாடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

புலி வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது குத்தியாலத்தூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் சொல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.

Tags:    

Similar News