தமிழ்நாடு (Tamil Nadu)

குட்டி கதையில் விஜய் சொன்ன மன்னர் யார்?- இணையத்தில் தேடும் நெட்டிசன்கள்

Published On 2024-10-28 04:40 GMT   |   Update On 2024-10-28 04:40 GMT
  • இளம் வயதிலேயே போர்க்களத்திற்கு சென்ற பாண்டிய மன்னன் குறித்து குட்டிக்கதை.
  • சேர, சோழ நாட்டைச் சேர்ந்த குறுமன்னர்கள் மொத்தவாக படையெடுத்து வந்த நிலையில், வெற்றி பெற்ற மன்னர் ஆவார்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது வழக்கும்போல் ஒரு குட்டி கதை சொன்னார்.

தனது குட்டிக் கதையைில் "ஒரு நாட்டுல ஒரு பெரிய போர் வந்துச்சாம். அப்போ அந்த நாட்டுல பவர் FULL ஆன தலைமை இல்லாம போனதால ஒரு பச்சப் புள்ள கைல தான் அந்த பொறுப்பு இருந்துச்சாம். அதனால அந்த நாட்டுல இருந்த பெரிய தலைங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டாங்களாம். அந்த சின்னப் பையன் படைய நடத்துற பொறுப்ப ஏத்துக்கிட்டு போர்க்களம் போலாம்னு சொன்னானாம்.

அப்போது, அந்த பெருந்தலைங்க எல்லாம் நீயே சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம் பவர் FULL ஆன பெரிய எதிரிங்கலாம் இருப்பாங்க களத்துல அவங்கள சந்திக்கறதுலாம் சாதாரண விஷயம் இல்லப்பா சொன்னா கேளு இது விளையாட்டு இல்ல போர்னா படைய நடத்தனும் அத்தனை எதிரிங்களையும் சமாளிக்கணும்... தாக்கு பிடிக்கணும்.. உனக்கு யாரும் கூட்டோ துணையோ இல்லாம எப்படி பா போர நடத்துவ எப்படி ஜெயிப்பன்னு எல்லாரும் கேட்டப்போ..

எந்த பதிலும் சொல்லாம போருக்கு தனியா தன் படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பய என்ன செஞ்சான்னு.. சங்க இலக்கியத்துல சொல்லியிருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க இல்லன்னா..படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க" என முடித்தார்.

குட்டிக் கதையில் விஜயன் சொன்ன அந்த மன்னர் யார்? என்ற கேள்வி தெரியாதவர்களின் எழுந்தது. மற்றர்வர்களிடம் ஏன் கேட்க வேண்டும். நம்மிடம்தான் கூகுள் இருக்கிறதே... என நெட்டிசன்கள் இணைய தளத்தில் மன்னர் பெயரை தேட ஆரம்பித்தினர்.

அந்த மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார். தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர் ஆவார்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும்போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர்.

இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு.

பகை மன்னர்கள் பாண்டியன் இளம் பருவத்தினன் என்பதை எண்ணினார்களேயன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப்படை மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்தது. சோழ நாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நகர்ந்தது பகைப்படை. பின்பு வேகமாகவும் சென்றது. கடைசியில் தலையாலங்கானம் என்னும் இடத்தில் நின்று போர் செய்தது.

அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்து விட்டமையால் எளிதில் சுற்றி வளைத்து விடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கம் அளித்தான்.

போர் கடுமையாக மூண்டது. இரு பெரு வேந்தர்களும், மற்ற குறுநில மன்னர்களும் தம் தம் படைக்குத் தலைவராக நின்று சண்டையிட்டனர். பாண்டி நாட்டுப் படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு படைவீரர் அத்தனை பேரும் ஊக்கமுற்றனர்.

வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம் பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித் தரவேண்டியது நம் கடமை' என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்துவந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கிவித்து வந்தான்.

அந்தப் போரில் அவர்களுக்குத் தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான். குறு மன்னர்கள் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன.

சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப் போராக இருப்பினும் அவனுடைய போர்த் திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியது. மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. குறும்படையில் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அது கண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

எருமையூரன் படைவீரர்களுக்குத்தான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. "நம்முடைய ஊர் எங்கே? இந்த இடம் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத் தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆள முடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்? பல நாடுகள் இடையிட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக் கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்?' இப்படி அவர்களுக்குள் இருந்த தன்னம்பிக்கை தளர்ந்தது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

அங்கங்கே பகைப்படைகளில் உள்ள வீரர்கள் பின் வாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக்கூட ஊக்கம் குறைந்துவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று சண்டையிட்டது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

பாண்டிப் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப்போரில் வெற்றிப் பெற்றான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்றவர்களும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டார்கள். தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

Tags:    

Similar News