தமிழ்நாடு

ஊழல் பட்டியலுடன் விரைவில் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்?

Published On 2024-11-12 05:36 GMT   |   Update On 2024-11-12 06:13 GMT
  • மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
  • வழக்கறிஞர் அணியின் உதவியோடு ஊழல் பட்டியலை தயார் செய்யப்படுகிறது.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை தொடங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது. மாநாட்டில் தமிழக அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தடுத்த திட்டங்கள், கொள்கைகளை விளக்கி அதிரடியாக விஜய் பேசினார்.

லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தை பரபரப்படைய செய்தது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் விஜய் கட்சி மாநாடு உற்று நோக்க வைத்தது.

மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக, அதிமுகவை குறி வைத்து ஊழல் பட்டியலை தவெகவினர் தயார் செய்து வருகின்றனர். வழக்கறிஞர் அணியின் உதவியோடு ஊழல் பட்டியலை தயார் செய்யப்படுகிறது.

ஆதாரப்பூர்வமாக, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஊழல் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக்கி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.

விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னர் பட்டியலை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முடிந்தால் ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்கவும் தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News