ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் முடங்கிய 'விஜய் கட்சி' செயலி
- கட்சி தொடங்கிய 1 மாதத்தில் 75 லட்சம் பேர் கட்சியில் புதிதாக இணைந்ததாக தகவல்கள் வெளியானது.
- சர்வர் முடக்கம் இன்னும் சில தினங்களில் சரியாகும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தொடங்கியது. கட்சியில் சேர்வதற்கான தனி இணைய தள செயலி உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
இதையொட்டி விஜய் கட்சியில் சேர்வதற்கு தீவிர ஆர்வம் கொண்டு செயலி மூலம் கட்சியில் இணைய தொடங்கினர். ஆர்வ மிகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் இணைய தள செயலி முடங்கியது.
இதனால் கட்சியில் சேர முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில் இணைய தள செயலி சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர தொடங்கினர்.
கட்சி தொடங்கிய 1 மாதத்தில் 75 லட்சம் பேர் கட்சியில் புதிதாக இணைந்ததாக தகவல்கள் வெளியானது. அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது.
மாநாட்டில் தமிழக அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தடுத்த திட்டங்கள், கொள்கைகளை விளக்கி அதிரடியாக விஜய் பேசினார்.
லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தை பரபரப்படைய செய்தது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் விஜய் கட்சி மாநாடு உற்று நோக்க வைத்தது.
மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
ஒரே நேரத்தில் செயலி மூலம் இணைய தளத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால் இணைய தள 'செயலி'யின் சர்வர் தற்போது முடங்கியது. சர்வர் கோளாறால் கட்சியில் சேர முடியாமல் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
சர்வர் முடக்கம் இன்னும் சில தினங்களில் சரியாகும். கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்கள் விவரங்களை சேகரித்து வருகிறோம். சிறப்பு செயலி சரியானதும் மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.