தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ வேண்டாம், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்- விஜய்

Published On 2025-01-26 15:22 IST   |   Update On 2025-01-26 15:22:00 IST
  • சிபிசிஐடி விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
  • சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News