செய்திகள்

ஐபோன் வைத்திருப்போரை பாதிக்கும் டிராய் புது விதிமுறை

Published On 2018-07-21 10:35 GMT   |   Update On 2018-07-21 10:37 GMT
இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் புதிய விதிமுறையை டிராய் விதித்து இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



ஆப்பிள் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடையே நிலவி வரும் போட்டி மேலும் சூடுபிடித்து இருக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின்  தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.



ஐபோன் பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக பயனரின் தகவல் மற்றும் விவரங்களை சேகரிக்க கோரும் செயலிகளிடையே கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்பிள் விதித்து வருகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுள் நிறுவனம் இதுபோன்ற விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை

ஆன்ட்ராய்டு பயனர்கள் டி.என்.டி. செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளே ஸ்டோரில் இந்த செயலிக்கு பயனர்கள் மோசமான விமர்சனங்களையே வழங்கியிருக்கின்றனர். இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்வது குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில், நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் தங்களது மொபைல் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். என எவ்வித இயங்குதளம் கொண்டிருந்தாலும் டி.என்.டி. 2.0 செயலியை நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மொபைல் போன் நிறுவனங்கள் அன்றி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியதாகும்.



"டிராய் விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள், தங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற செயலிகளை இயக்க தேவையான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "விதிமுறைகளின் படி இதுபோன்ற செயலிகளை அனுமதிக்காத சாதனங்களில் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சாதனங்களை தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-இல் இருந்து நீக்க முடியும்."

அந்த வகையில், டி.என்.டி. 2.0 செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதிக்காத பட்சத்தில் நாட்டில் விற்பனையாகும் ஐபோன்கள் அனைத்திற்கும் 3ஜி, 4ஜி மற்றும் அடிப்படை டெலிகாம் நெட்வொர்க் சேவையை இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் விவகாரத்தை பொருத்த வரை இரண்டு தரப்புமே ஒரே விஷயத்துக்கு போராடி வருகின்றன. இரண்டு தரப்பும் தனது பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவே நினைக்கின்றன. மொபைல் போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை டிராய் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது, ஆப்பிள் நிறுவனமும் இதே நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.



எனினும் ஆப்பிள் தனது பயனரின் தனியுரிமை எவ்வித காரணங்களாலும் பறிக்கப்பட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் பயனரின் தனியுரிமை தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எவ்வித செயலியாக இருந்தாலும், அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை. 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை குறைக்க பல்வேறு ஸ்மார்ட் வழிமுறைகள் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதனால் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோனில் ஸ்பேம் அழைப்புகள் குறைக்கப்படுவதை விளக்கி, டிராய் செயலியை அனுமதிப்பதில் இருந்து விலக்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #telecommunications #Apple
Tags:    

Similar News