இந்தோனேசியாவில் நிலச்சரிவால் புதைந்த வீடுகள்... 11 பேர் உயிரிழப்பு
- சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
- அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. நிலச்சரிவினால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
ரியாவு தீவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என கூறுகின்றனர்.
தற்போது அங்கு வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் மீட்பு பணிகளும் சவாலாக உள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு நிறுவனம் நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளது.
அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் 41,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.