உலகம்

துப்பாக்கிச்சூடு

தவறுதலாக தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்- அமெரிக்காவில் மேலும் ஒரு பரபரப்பு சம்பவம்

Published On 2022-06-07 05:40 GMT   |   Update On 2022-06-07 05:40 GMT
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
  • 2 வயது சிறுவன் தனது பெற்றோர்களின் துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

புளோரிடா:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புளோரிடாவில் வாழ்ந்து வந்த ரெஜி மாப்ரி - மேரி அயலா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களின் 2 வயது மகன் தனது பெற்றோரின் 'லோட்' செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனது பெற்றோரும் துப்பாக்கியை கவனிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அந்த சிறுவன் துப்பாக்கியை வைத்து தந்தையை தவறுதலாக சுட்டு உள்ளான். அப்போது துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து தந்தை ரெஜி மாப்ரி தரையில் விழுந்தார்.

விஷயம் அறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே ரெஜி மாப்ரி உயிரிழந்தார். முதலில் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதலில் போலீசார் கருதினர். ஆனால் விசாரணையில் அந்த தம்பதியினரின் 2 வயது சிறுவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News