செய்திகள் (Tamil News)

நேபாளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்

Published On 2018-05-29 10:26 GMT   |   Update On 2018-05-29 10:26 GMT
நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். #NepalTourists #NepalEconomicSurvey
காத்மாண்டு:

இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலாப் பயணிகள் குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை அரசு சமீபத்தில் வெளியிட்டது. 2017-ம் ஆண்டுக்கான இந்த ஆய்வறிக்கையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை விவரம், அதிக அளவில் வருகை தந்த சுற்றுலாப் பகுதி மற்றும் சுற்றுலா மூலம் கிடைத்த வருவாய் போன்ற புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வறிக்கையின்படி, நேபாளத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். 2017ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 217 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதில் 17.1 சதவீதம் பேர் இந்தியர்கள். சீனா 11.1 சதவீத சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா 8.44 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டும் இந்தியர்களே முதலிடம் பிடித்திருந்தனர்.



நேபாளத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டும் 47 சதவீதம் ஆகும். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப்  பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

81 சதவீத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலமாகவும், 19 சதவீத பயணிகள் தரைவழி போக்குவரத்து மூலமாகவும் (குறிப்பாக இந்தியர்கள்) நேபாளத்திற்கு வருகை தந்துள்ளனர். #NepalTourists #NepalEconomicSurvey

Tags:    

Similar News