செய்திகள்
சிறுநீரக பாதிப்பு தீவிரம் - சிறையில் இருந்து நவாஸ் ஷரிப் மருத்துவமனைக்கு மாற்றம்
10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்து வருவதால் அவரை மருத்துவமனைக்கு மாற்ற அரசு தீர்மானித்துள்ளது. #NawazSharif
இஸ்லாமாபாத்:
லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் கடந்த 13-ம் தேதியில் இருந்து ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நவாஸ் ஷரிப்புக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்புக்காக அடிடாலா சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நோய் தீவிரமடைந்து சிறுநீரகம் செயலிழந்துவிடும் அபாயநிலையில் இருக்கும் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அடிடாலா சிறைச்சாலை அமைந்துள்ள பஞ்சாப் மாகாண நிர்வாகம் இந்த பரிந்துரையை பரிசீலித்து வந்தது.
இதற்கிடையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக நவாஸ் ஷரிப் தெரிவித்ததையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நவாஸ் ஷரிப்-ஐ சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதித்தது. அவருடைய இ.சி.ஜி. முடிவு திருப்திகரமாக இல்லாததை கண்ட டாக்டர்கள் உடனடியாக நவாஸ் ஷரிப்புக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.
இதைதொடர்ந்து, இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் நவாஸ் ஷரிப்பை அனுமதித்து சிகிச்சை அளிக்க பஞ்சாப் மாகாண அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் அவர் விமானம் மூலம் இஸ்லாமாபாத் நகருக்கு கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பாதுகாப்பு நிறைந்த அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #Sharifshiftedtohospital