செய்திகள்

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

Published On 2018-09-14 05:35 GMT   |   Update On 2018-09-14 05:35 GMT
அமெரிக்காவில் கியாஸ் கசிவு ஏற்பட்டு 70 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். #usGasexploded

பாஸ்டன்:

அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது.

இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் பரவியது. அதை தொடர்ந்து எரிவாயு குழாய் வெடித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இருந்தாலும் கியாஸ் கசிவு தொடர்கிறது. எனவே அந்த பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

கொலம்பியாவில் இருந்து வரும் எரிவாயு குழாயில் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக குழாய் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினர். நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மசாசூசட்ஸ் மாகாண கவர்னர் சார்லிபாகர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் அறிவுரையை ஏற்குமாறு குடியிருப்பு வாசிகளிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். #usGasexploded

Tags:    

Similar News