செய்திகள்

அமெரிக்க எல்லையில் 8 வயது சிறுவன் மரணம்- இந்த மாதத்தில் இரண்டாவது அகதி பலி

Published On 2018-12-26 04:27 GMT   |   Update On 2018-12-26 04:27 GMT
மெக்சிகோ எல்லையில் உள்ள அமெரிக்காவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். #MigrantBoyDies #MexicoUSBorder
வாஷிங்டன்:

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல்சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் நுழைகின்றனர்.

இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். தடையை மீறி அமெரிக்காவினுள் நுழையும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடும் நடைபெறுகிறது.



இந்நிலையில் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த  கவுதமாலாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளான். இத்தகவலை அமெரிக்காவின் குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் பெயர் பெலிப் அலோன்சோ-கோமஸ் என்றும், இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெக்சாஸ் எம்பி ஜோவாகின் கேஸ்ட்ரோ வலியுறுத்தி உள்ளார்.

மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகதிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு அதே கவுதமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MigrantBoyDies #MexicoUSBorder

Tags:    

Similar News