செய்திகள்

மலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா

Published On 2019-01-31 08:34 GMT   |   Update On 2019-01-31 09:38 GMT
மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றார். #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
கோலாலம்பூர்:

மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை.

இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் உள்ள மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.



அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, பஹாங் மாநிலத்தின் தலைவரான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா (வயது 59), கடந்த 24-ம் தேதி புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16வது மன்னர் ஆவார்.

இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் புதிய மன்னர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது நாட்டின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் பெரேக் மாநில தலைவரான சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். விழாவில் பிரதமர் மகாதீர் முகமது மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, உலக கால்பந்து அமைப்பான பிபா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
Tags:    

Similar News