செய்திகள்
வங்காளதேசத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தை கடத்த முயற்சி - டாக்காவில் பரபரப்பு
வங்காளதேசம் நாட்டின் டாக்கா நகரில் இருந்து துபாய் செல்லும் விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்த முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளனர். #planehijackAttempt #Dubaiboundplane #planehijack #Bangladeshplanehijack
டாக்கா:
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 245 கிலோமீட்டர் தூரத்தில் அந்நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் பிரபல துறைமுக நகரமான சட்டோகிராம் என்னும் நகரம் அமைந்துள்ளது.
இந்நிலையில், வங்காளதேச அரசுக்கு சொந்தமான ‘பிமன் பிஜி 147’ வழித்தட எண் கொண்ட போயிங் ரக விமானம் டாக்கா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை சுமார் 5 மணியளவில் 142 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கையில் துப்பாக்கியுடன் விமானியின் அறைக்குள் நுழைந்த ஒரு பயங்கரவாதி விமானியை மிரட்டி, விமானத்தை கடத்திச் செல்ல முயன்றான்.
இதையடுத்து, தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, அருகாமையில் உள்ள சட்டோகிராம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.
அதற்குள் சட்டோகிராமில் உள்ள ஷா அமானத் விமான நிலையத்தில் ஏராளமான போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். மாலை 5.40 மணியளவில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது.
அதில் இருந்த 142 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், உள்ளே இருக்கும் பயங்கரவாதியை தாக்கிப் பிடிக்க அதிரடிப்படையினர் அந்த விமானத்தை சூழந்து முற்றுகையிட்டுள்ளதாகவும் டாக்காவில் இருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #planehijackAttempt #Dubaiboundplane #planehijack #Bangladeshplanehijack