பணமதிப்பிழப்புக்கு 8 வயது.. வங்கி வாசலில் பிறந்த பையனுக்கு பர்த்டே கொண்டாடிய அகிலேஷ் - பாஜகவுக்கு குட்டு
- நவம்பர் 8 இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றினார்
- பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தை பணமதிப்பிழப்பில் மக்கள் பட்ட இன்னல்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.
அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.
இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன.
மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளான நிலையில் திடீர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. நேற்றுடன் பணமதிப்பிழப்பு செயல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பணமதிப்பின்போது உத்தரப் பிரதேசத்தில் வங்கியில் பணம் மாற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி ஒருவருக்கு வங்கி வாசலிலே பிரசவமானது.
அவர் பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தை பணமதிப்பிழப்பில் மக்கள் பட்ட இன்னல்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை 8 வயது சிறுவன். எனவே பணமதிப்பிழப்பை விமர்சிக்கும் விதமாக அந்த சிறுவனின் 8 வது பிறந்தநாளை இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து கோலகமாக கொண்டாடியுள்ளார்.
சிறுவனுக்கு கட்சியின் சைக்கிளை அகிலேஷ் பரிசளித்துள்ளார். பணமதிப்பிழப்பு குறித்து பேசிய அவர், பாஜக நாட்டின் பொருளாதாரத்தையும், கொள்கைகளையும் சிதைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் சிறு குறு தொழிலாளிகளின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்லோ பாய்சனாக உள்ளது என்றும் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்டவே மக்கள் மீது ஜிஎஸ்டி வரியை பாஜக விதித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.