உலகம் (World)
உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம்

உக்ரைனில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் ரஷியா படைகள்

Published On 2022-02-23 09:55 GMT   |   Update On 2022-02-23 09:55 GMT
உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தூரத்தில் ரஷியா படைகள் குவிக்கப்பட்டுள்ளது செயற்கைக்கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது.
ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன். உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெற்கு பெலாரஸ் மோஜர் அருகே சிறிய விமான தளத்தில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள், டஜன் கணக்கில் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த விமானத்தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவிற்கும் குறைவான தூரத்தில்தான் உள்ளது.

மேற்கு ரஷியாவின் பொச்சேப் பகுதி அருகே கூடுதல் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதும் தெளிவாக தெரியவந்துள்ளது. பெல்கோரோட்டின் மேற்கு புறநகரில் உள்ள ராணுவ தளத்தில் ஒரு புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

பெல்கோரோட் தென்மேற்கு புறநகர் பகுதியில் அதிக அளவில் வீரர்களும், தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளது. இது உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளது.

கனரக வாகனங்களை எடுத்துச் செல்லும் வாகனம் மூலம் டாங்கிகள் போன்ற ராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த செயல்பாடு உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

உக்ரைன் எல்லையில் சமீபத்தில் ரஷியா 1.50 லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை குவித்துள்ளது.

Similar News