உலகம் (World)
புதின்

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை- புதின் அதிரடி

Published On 2022-02-24 03:41 GMT   |   Update On 2022-02-24 03:41 GMT
ரஷியா - உக்ரைன் நடவடிக்கையில் தலையிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷியா இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷியா தனது படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.  

ரஷியா படையெடுப்பின் அச்சுறுத்தலால் உக்ரைனில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்வதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து ரஷியாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார்.

உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை  கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் நடவடிக்கையில் தலையிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News