உலகம்

இந்த ஆண்டில் இதுவரை 289 குழந்தைகள் பலி.. மத்திய தரைக்கடல் பகுதியில் தொடரும் சோகம்

Published On 2023-07-14 15:52 GMT   |   Update On 2023-07-14 15:52 GMT
  • முதல் ஆறு மாதங்களில் 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.

ஜெனிவா:

உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு. மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது அபாயகரமான விபத்துகளை சந்தித்து பலர் உயிரை விட்டுள்ளனர். இதனால் குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற 289 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் பாதியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என யுனிசெப் அமைப்பின் தலைவர் வெரீனா கனாஸ் கூறி உள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ல் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சுமார் 3,300 குழந்தைகள் துணையில்லாமல் அல்லது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

இந்த குழந்தைகள் தாங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உலகத் தலைவர்கள், இந்த குழந்தைகளுக்கு பயனுள்ள தீர்வுகளைத் தேடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என கனாஸ் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News