உலகம்

29 முறை பயனடைந்த விவேக், ஹெச்-1பி விசாவை எதிர்ப்பதா?: புலம்பும் இந்தியர்கள்

Published On 2023-09-17 11:16 GMT   |   Update On 2023-09-17 11:16 GMT
  • லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை நம்பியுள்ளனர்
  • விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விசா நடைமுறை குறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது:

ஹெச்-1பி விசா அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தீங்கை விளைவிக்கிறது. லாட்டரி திட்டம் பணியாளருக்கு பயனை அளிக்காது. நிபந்தனைக்குட்பட்ட அடிமை முறையாக பணியாளருக்கு இருப்பதனால் பணியமர்த்தும் நிறுவனத்திற்குத்தான் இது பலனளிக்கிறது. பணியாளருடன் வரும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் நாட்டிற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பயனும் இல்லை. நான் இந்த விசா முறையை நீக்கி விடுவேன்.

இவ்வாறு விவேக் கூறினார்.

2018 தொடங்கி 2023 வரை, விவேக் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ் சார்பாக இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்துவர விண்ணப்பித்து இத்திட்டத்தால் பயனடைந்தவர். மேலும், அவரது பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.

இப்பின்னணியில், விவேக் ராமசாமியின் கருத்து, இந்திய எதிர்ப்பு பேச்சாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.

Tags:    

Similar News